Thursday, 2 February 2012

uyir aasan

                       உயிர் ஆசான்

அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
அறிவினைத் தருவதில் முதனிலைதான் எந்நாளும்
அளவில்லா அறிவினை நமக்கு ஊட்டுவதும்
அறிவுக்கண் திறந்து நல்வழி காட்டுவதும்

ஆழமான கல்வி தரும் ஆசிரியரே

ஆமோதிக்க மறுத்தால் வரும் பெருந்துயரே
ஆளாக்குவதில் இவரும் பங்கு கொள்வார்
ஆளுமைத் திறனுக்கு அடித்தளம் வைப்பார்

இன்று பயில்வது என்றுமே உதவும்

இடித்தால் திறக்கும் இறுகிய கதவும்
இறுகிய கதவாய் இருக்கும் நமறிவை
இடிக்கத்தான் நல்ல ஆசிரியர் தேவை

ஈரமண் தண்ணீரால் பக்குவம் அடைந்திடும்

ஈர்க்கும் ஆசிரியரால் அறிவுமண் நனைந்திடும்
ஈர்க்கும் உருவங்களை ஈரமண் பெற்றிடும்
ஈரமான அறிவுமண்ணும் அவ்வாறே சிறந்திடும்

உறவுகள் கூட உதவாத சமயம்

உதவிடும் கல்வியோ உயரத்தில் இமயம்
உன்னத கல்வியை உனக்கு கொடுப்பார்
உறங்கும் அறிவின் தூக்கத்தைக் கெடுப்பார்

ஊக்கத்துடன் கற்பிக்கும் ஆசானை பெற்றிடு

ஊரே வியக்கும் கல்வியை கற்றிடு
ஊஞ்சலாய் ஆடும் மனதினை மாற்றிடு
ஊரே வியந்திடும் உயரத்தில் ஏறிடு

எல்லா துறையிலும் அவசியம் தேவை

எல்லா காலத்திலும் செய்திடும் சேவை
எந்த பொருளும் கல்வியின்றி அமையாது
எண்ணிப்பார் ஆசானின்றி கல்வியே இருக்காது

ஏளனம் செய்யாதே கல்வியை விற்று

ஏனிந்த நிலையென நீயோசி சற்று
ஏழைகளும் கல்விபெற்று முன்னேற வேண்டும்
ஏற்றிவிட இரக்கங்கொண்ட நல்லாசான் வேண்டும்

ஐயங்களைத் தீர்த்து அறிவுதரும் குருவே

ஐயமில்லை அவனே இறைவனின் உருவே
ஐம்புலன்களை அடக்கும் புத்தியும் தருவான்
ஐம்பூதங்களை கடக்கும் சித்தியும் தருவான்

ஒன்றும் இல்லாதோருக்கு எல்லாம் தரும்

ஒன்றன்பின் ஒன்றாக எல்லாம் வரும்
ஒருவர் பெரும் கல்வி அறிவு
ஒருபிறவி முழுதும் தரும் செறிவு

ஓடமாயிருந்து நம்மை சேர்ப்பார் கரை

ஓயமாட்டார் ஒன்றை கற்பிக்கும் வரை
ஓங்கிய கல்விக்கு எல்லையே இல்லை
ஓர் ஆசானில்லையேல் அக்கல்வியே இல்லை.

                  

uyir thandhai

                          உயிர் தந்தை 

அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்

ஆதம் தொடங்கிய அழகிய உறவு

ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு

இரவும் பகலும் அயராது உழைப்பதும்

இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்

ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்

ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.

உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்

உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே

ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து

ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்


எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்

ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை

ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்

ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்

ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்

ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக

ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது

ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை

ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.