Tuesday 31 January 2012

uyir (eluthu) thaai

                உயிர் (எழுத்து) தாய்

ன்னை ஓர் ஆலயம் என்று 

அவளை போற்றிப் புகழ்வது நன்று 

அன்பு தருவதில் அட்சய பாத்திரம் 

அதுவே அவளின் தாரக மந்திரம்

 

தாமின் மனைவி தொடங்கிய உறவு

ஆண்டவனின் மனம் அடங்கிய உறவு

ஆளாக்கும் அன்பில் வெள்ளப் பேருக்கு 

ஆயினும் அவளிடம் இல்லை செருக்கு 

 

இனிமையில் தாய் அமிர்தத்தை வென்றாள்

 இதயத்தின் மையத்தில் இனிதே நின்றாள்

இரவும் பகலும் காக்கும் கண்கள் 

இனிய உறவை உருவாக்கும் பெண்கள் 



ஈ எறும்பும் அண்டாமல் காப்பாள் 

ஈன்ற பிள்ளையை இமயத்தில் சேர்ப்பாள் 

ஈரமிக்க நெஞ்சில் கங்கையே தோற்கும் 

ஈசனுக்கு நிகரென உலகமே ஏற்கும்



உரலில் உன்னைக் கட்டுவதும் அன்னை

உறங்காமல் உணவை ஊட்டுவதும் அன்னை 

உள்ளே இருந்து உதைக்கும் உன்னை

உருகும் அன்பால் வதைக்கும் அன்னை

 

 

ஊரே தன் பிள்ளையை ஏசினாலும்

ஊடகம் எல்லாம் தவறாக பேசினாலும்

ஊக்கம் பெற்றத் தாய் நம்பமாட்டாள்

ஊனமாய் பிறந்தாலும் வெறுக்க மாட்டாள்

 

எல்லா உயிர்களும் போற்றும் பாசம்

எளிதில் உலகில் கிடைக்கும்  நேசம்

எக்காரணம் கொண்டும் தாயை மறக்காதே

எல்லாரிடமும் அடிபட்டு நாயாய் இறக்காதே

 

எவனொருவன் தருவானோ தாயிற்கு முதன்மை

எதிர்வரும் பிறவிகளிலும் அவனுக்கு நன்மை

எவராலும் அடைக்க முடியாத பெருங்கடன்  

எதிர்பாராமல் நேசிக்கும் தாயின் நன்றிக்கடன்

 

ஏதுமறியா மழலையின் அழுகுரலை கேட்பாள்

ஏக்கத்தையும் வலியையும் ஒருநொடியில்   மறப்பாள்

ஏரால் உழப்பட்ட நிலத்தின் பயிராய்

ஏற்பட்ட உறவில் இருப்பாள் உயிராய்

 

ஐந்தாம் முகமாம் பிரம்மனின் உருவில்

ஐக்கியம் ஆகிவிடு அவ்வுன்னத உறவில்

ஐந்தறிவு பெற்ற விலங்கு முதல்

ஐயமில்லை உறவில் தாயே முதல்

 

ஒளிமிக்க உறவில் தாயே தோரணம்

ஒருநாள் முழுவதும் கூறலாம் காரணம்

ஒருமுறை தாயாய் இருந்தால் தெரியும்

ஒருதாயின் இன்ப துன்பங்கள் புரியும்

 

ஓரளவு இன்பம் தரும் காதல்

ஓரளவிற்கு மேல் நட்பில் மோதல்

ஓர் அன்னையிடம் காதல் நட்பு

ஓங்கி நிற்காமல் போதல் இயல்பு.  

 

 

 

 

  

 

 

   

 

1 comment: