உயிர் ஆசான்
அன்னைக்கும் தந்தைக்கும் அடுத்ததாய் சொன்னாலும்
Thursday, 2 February 2012
uyir thandhai
உயிர் தந்தை
அன்பிற்கு அன்னையெனில் அறிவிற்கு தந்தை
அனுபவ அறிவைத் தருவதில் சந்தை
அனலாய் கொதித்து மகனைத் திட்டுவார்
அதேநேரம் அளவில்லா அன்பினை காட்டுவார்
ஆதம் தொடங்கிய அழகிய உறவு
ஆழம் மிகுந்த அற்புத உணர்வு
ஆளாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு
ஆதவனே வியக்கும் அச்செயல் கண்டு
இரவும் பகலும் அயராது உழைப்பதும்
இல்லை என்று கூறாது கொடுப்பதும்
இனிய தந்தையின் சிறந்த குணம்
இமயம் போல் உயர்ந்த மனம்
ஈரைந்து மாதங்கள் சுமக்கவில்லை என்றாலும்
ஈன்ற பிள்ளையை சுமப்பார் மனதில் எந்நாளும்
ஈர நெஞ்சமும் இறக்க குணமும்
ஈன்ற பிள்ளைக்குத் தந்தை தரும் வரமாம்.
உலகத்துக்கே தந்தை ஒளிதரும் ஆதவன்
உனக்கும் எனக்கும் நம்தந்தையே ஆதவன்
உன்னை காக்கும் உயர்ந்த சுவரே
உழைப்பையும் உயர்வையும் கற்பித்த அவரே
ஊக்கத்தையும் கொடுத்து உணவையும் கொடுத்து
ஊரே வியக்கும் கல்வியும் கொடுத்து
ஊருக்கே சொல்லி பெருமை படுவார்
ஊமை கூட உன்புகழ் பாடும்படி செய்வார்
எல்லா தேர்விலும் எளிதாம் வினாத்தாள்
எதிரே தந்தையின் உந்துதல் இருந்தால்
எதையும் ஆழமாக சிந்துத்துப் பார்ப்பார்
எல்லா பிரச்சனைகளையும் சந்தித்துத் தீர்ப்பார்
ஏணியாய் முன்னேற வைத்திடுவார் நம்மை
ஏமாற்றம் தாராமல் செய்திடுவார் நன்மை
ஏற்றிவிட்ட தந்தையின் ஆசியே போதும்
ஏற்பட்ட துன்பங்கள் தூசியாய் போகும்
ஐம்பதை தாண்டியும் ஓய்வு பெறாமல்
ஐம்புலனுக்கும் முழு இன்பம் தராமல்
ஐவர் குடும்பத்தில் உழைக்கும் ஒருவன்
ஐயமில்லை அவனே நமக்கு இறைவன்
ஒருவர் வாழ்வில் ஒளிமயம் ஆக
ஒருமுறை தந்தை பதவியை பெருக
ஒத்துக்கொள்வாய் அது மிக பெரிது
ஒருமுறை மட்டும் பெற்றால் நல்லது
ஓய்வுக்குப் பின்னும் ஓயாத சிந்தை
ஓரங்கட்டாதே அறிவில் தேயாத தந்தை
ஓதும் மந்திரம் எல்லாம் வீணாகிபோகும்
ஓர் தந்தையின் சொல்லே மந்திரமாகும்.
Tuesday, 31 January 2012
uyir (eluthu) thaai
உயிர் (எழுத்து) தாய்
அன்னை ஓர் ஆலயம் என்று
அவளை போற்றிப் புகழ்வது நன்று
அன்பு தருவதில் அட்சய பாத்திரம்
அதுவே அவளின் தாரக மந்திரம்
ஆதாமின் மனைவி தொடங்கிய உறவு
ஆண்டவனின் மனம் அடங்கிய உறவு
ஆளாக்கும் அன்பில் வெள்ளப் பேருக்கு
ஆயினும் அவளிடம் இல்லை செருக்கு
இனிமையில் தாய் அமிர்தத்தை வென்றாள்
இதயத்தின் மையத்தில் இனிதே நின்றாள்
இரவும் பகலும் காக்கும் கண்கள்
இனிய உறவை உருவாக்கும் பெண்கள்
ஈ எறும்பும் அண்டாமல் காப்பாள்
ஈன்ற பிள்ளையை இமயத்தில் சேர்ப்பாள்
ஈரமிக்க நெஞ்சில் கங்கையே தோற்கும்
ஈசனுக்கு நிகரென உலகமே ஏற்கும்
உரலில் உன்னைக் கட்டுவதும் அன்னை
உறங்காமல் உணவை ஊட்டுவதும் அன்னை
உள்ளே இருந்து உதைக்கும் உன்னை
உருகும் அன்பால் வதைக்கும் அன்னை
ஊரே தன் பிள்ளையை ஏசினாலும்
ஊடகம் எல்லாம் தவறாக பேசினாலும்
ஊக்கம் பெற்றத் தாய் நம்பமாட்டாள்
ஊனமாய் பிறந்தாலும் வெறுக்க மாட்டாள்
எல்லா உயிர்களும் போற்றும் பாசம்
எளிதில் உலகில் கிடைக்கும் நேசம்
எக்காரணம் கொண்டும் தாயை மறக்காதே
எல்லாரிடமும் அடிபட்டு நாயாய் இறக்காதே
எவனொருவன் தருவானோ தாயிற்கு முதன்மை
எதிர்வரும் பிறவிகளிலும் அவனுக்கு நன்மை
எவராலும் அடைக்க முடியாத பெருங்கடன்
எதிர்பாராமல் நேசிக்கும் தாயின் நன்றிக்கடன்
ஏதுமறியா மழலையின் அழுகுரலை கேட்பாள்
ஏக்கத்தையும் வலியையும் ஒருநொடியில் மறப்பாள்
ஏரால் உழப்பட்ட நிலத்தின் பயிராய்
ஏற்பட்ட உறவில் இருப்பாள் உயிராய்
ஐந்தாம் முகமாம் பிரம்மனின் உருவில்
ஐக்கியம் ஆகிவிடு அவ்வுன்னத உறவில்
ஐந்தறிவு பெற்ற விலங்கு முதல்
ஐயமில்லை உறவில் தாயே முதல்
ஒளிமிக்க உறவில் தாயே தோரணம்
ஒருநாள் முழுவதும் கூறலாம் காரணம்
ஒருமுறை தாயாய் இருந்தால் தெரியும்
ஒருதாயின் இன்ப துன்பங்கள் புரியும்
ஓரளவு இன்பம் தரும் காதல்
ஓரளவிற்கு மேல் நட்பில் மோதல்
ஓர் அன்னையிடம் காதல் நட்பு
ஓங்கி நிற்காமல் போதல் இயல்பு.
mother
தாய்
கருவறையில் நாம் காத்திருந்த போது
கஷ்டப்பட்டு நம்மை காத்திருந்த சாது
இருட்டறையென நாம் அஞ்சியதை பார்த்து
இஷ்டப்பட்டு நம்மை அரவணைத்தால் சேர்த்து
தந்தையை யாரென சொல்வதும் அவளே
தரணியில் முதலிடம் வெல்வதும் அவளே
சிந்தை முழுவதும் வியாபித்து நின்றாயே!
சிறுவன் எனக்காக மறுமுறை பிறந்தாயே!!
Monday, 30 January 2012
uyir(eluthu)kaadhalargal
உயிர்(எழுத்து)காதலர்கள்
காதலன்:அழகால் என்னை கவர்ந்துவிட்டாய்
ஆயுதமின்றி என்னை கொன்றுவிட்டாய்
இமைத்தால் போதும் இந்நொடியே
ஈருடல் ஓருயிர் என்றிருப்போம்
உன்னுடன் நானும் சேர்ந்துவிட்டால்
ஊரே எதிர்ப்பினும் விடமாட்டேன்
என்னுயிர் தாவென நீ கேட்டால்
ஏனென்று கேளாமல் உயிர்விடுவேன்
ஐயமின்றி நான் சொல்கிறேன்
ஒருநாள் வாழ்க்கை என்றாலும்
ஓலைக்குடிசையில் என்றாலும்
உன்னுடன்தான்.
காதலி: அன்பால் என்னை ஈர்த்துவிட்டாய்
ஆயினும் என்னால் முடியாது
இருக்கிறேன் என்பதன் காரணமே
ஈன்றெடுத்த என் பெற்றோரே
உன்னுடன் நான் வந்துவிட்டால்
ஊரே ஏசும் பரவாஇல்லை
என் பெற்றோரே எனை எதிர்த்தால்
ஏகப்பட்ட வருத்தம் வரும்
ஐயமின்றி நான் வரமாட்டேன்
ஒன்றை சொல்கிறேன் கேட்டுவிடு
ஓரமாய் ஒதுங்கி எனை
விட்டுவிடு
Sunday, 29 January 2012
don't kill yourself
உன்னைக் கொல்லாதே
கலிகால வெள்ளம் வருகையிலே ...
நெட்டுக் குத்து மரங்களெல்லாம்
விட்டுக்கொடுக்காமல் வீழ்ந்து விடும்
சாய்ந்து கொடுக்கும் பசும்புல்லோ
வாய்ப்பு பெற்று வாழ்ந்து விடும்
சுழலும் பூமி நிற்கவில்லை இன்று
நாளை தொடருமா தெரியவில்லை
நிழலும் நிற்காது உனக்காக என்று
தெரிந்துகொண்டால் பயமில்லை
வானத்தில் பறக்கும் சக்தி பெற்றும்
நீரின் மேல் மிதக்கும் கருவி பெற்றும்
ஞானத்தில் திளைக்கும் அறிவு இன்றி
பாரின் மேல் வாழ்வது கடினமன்றோ?
உன் கையில் எதுவும் இல்லை
வாழ்க்கையில் அர்த்தம் எதுவுமில்லை
வருகிறோம் வாழ்கிறோம் போகிறோம்
நிலைத்து யாரும் நிற்பதில்லை
வாழ்க்கையின் அர்த்தம் தெரிந்தால் தான்
வாழ்வேன் என நீ சொன்னால்
வாழும் உயிர்கள் அனைத்தையும்
உன்னுடன் அழைத்துச் சென்றுவிடு
Thursday, 26 January 2012
Subscribe to:
Posts (Atom)

